மலைக்கோவிலின் 1,300 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தபடி ஏறிய இஸ்லாமியச் சிறுமி

1 mins read
bf26ed6b-f57a-4559-87bd-c753746a6f21
நீண்டநாள் விருப்பம் நிறைவேறியது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார் சிறுமி ஹனா. - படம்: இந்து தமிழ் திசை

சேலம்: திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள 1,300 படிக்கட்டுகளில், யோகாசனம் செய்தவாறு ஏறி சாதித்த இஸ்லாமியச் சிறுமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த 36 வயதான ஜுபைர் அகமது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி அதியா பானு (30 வயது). இத்தம்பதியரின் மகளான ஹனா (7 வயது) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பயின்று வரும் இச்சிறுமிக்கு ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்றும் அதில் யோகாசனத்துக்கும் பங்கு இருக்க வேண்டும் என்றும் ஆசை இருந்தது.

இதையடுத்து, மலைக்கோவிலில் உள்ள படிக்கட்டுகளில் யோகாசனம் செய்தவாறு ஏறி சாதனை படைக்க முடிவானது.

அதன்படி, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) மலைக்கோவில் படிக்கட்டுகளில் வெவ்வேறு வகையான ஆசனங்களைச் செய்தபடி சிறுமி ஹனா உற்சாகத்துடன் மலையேறியதைக் கண்டு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வியந்து போயினர்.

இந்தச் சாதனை குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி ஹனா, தமது நீண்டநாள் விருப்பம் நிறைவேறியது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்