சென்னை: “கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தன்னலமிக்கவர்களாக மாறிவிட்டனர். அதனால் அக்கட்சியின் கொள்கை தோற்றுப் போய் விட்டது,” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியுள்ளார். அதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது என்ற அவதூறுச் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.
கம்யூனிஸ்டுகளின் நேர்மையை, எளிமையை, தன்னல மறுப்பை, பொதுநல வேட்கையை, போராட்ட குணத்தை வர்க்க எதிரிகளும் ஒப்புக் கொள்வதை நாடறியும் என்பதை ஆ.ராசாவும் அறிந்திருக்க வேண்டும். போகிற போக்கில் “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டும் ஆ.ராசா, அவர் கண்டறிந்த தன்னலவாதிகளாக இருக்கும் கம்யூனிஸ்டுக்காரர்கள் குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.