நாகப்பட்டினத்தில் கரையொதுங்கிய ராக்கெட் லாஞ்சர்

1 mins read
ee056903-2a81-4bda-85f8-7d907f613f10
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையுடனான ராக்கெட் லாஞ்சர் ஒன்று நாகப்பட்டினத்தில் கரையொதுங்கியுள்ளது. - படம்: தினமணி

நாகப்பட்டினம்: பிரதாபராமபுரம் கடற்கரையில் கூம்பு வடிவிலான ஒரு பொருள் கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில், அந்தப் பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெடிபொருள்களை நிரப்பித் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடிய பொருளாக அது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

டிசம்பர் 27 அதிகாலையில், அந்தப் பொருள் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுமார் 3 அடி நீளமுள்ள இந்தப் பொருளில் 20 செ.மீ. மற்றும் 15 செ.மீ. சுற்றளவுகளைக் கொண்ட இரண்டு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கூம்பு வடிவத்தில் உள்ள குழாயின் முன்பகுதியில் சிறிய மின்னும் வகையில் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அந்தப் பொருளில் உள்ள பெரிய குழாயின் பின்பகுதியில் ‘மேட் இன் யுஎஸ்ஏ (அமெரிக்கா)’ எனும் ஆங்கில எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

இதனால், இந்தப் பொருள் ராக்கெட் வெடிகுண்டாக இருக்கக் கூடும் என மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இது வெடிகுண்டா அல்லது சந்தேகத்திற்குரிய சாதனமா என்பதை உறுதி செய்ய நாகப்பட்டினம் வெடிகுண்டுக் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு அதிகாரிகளும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

அது வெடி மருந்து இன்றி செயலிழந்த ராக்கெட் லாஞ்சர் என்பதும், அதில் ‘மேட் இன் யுஎஸ்ஏ’ என முத்திரை பதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

அதனுள் ஏதேனும் வெடிபொருள்கள் உள்ளனவா என்று அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர்.

பின்னர் அந்தச் சாதனத்தைப் பாதுகாப்பாக அவர்கள் நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்