சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைமை ஒதுங்கிணைப்பாளர் சீமான், ஒலிவாங்கிச் சின்னத்தை இடைத்தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்தப் போவதாகவும் விவசாயி சின்னத்தைப் பெற்று அதை நிரந்தரமாகப் பயன்படுத்த இருப்பதாகவும் கூறினார்.
“தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் எங்கள் கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விவசாயி சின்னத்தை ஒதுக்கக் கேட்டோம். ஆனால், அந்தச் சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது,” என்றார் சீமான்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, தாங்களே மூன்று விதமான விவசாயி சின்னங்களை வரைந்து தேர்தல் ஆணையத்திடம் அளித்த நிலையில், அதுகுறித்து பரிசீலனை செய்து அறிவிக்க காலதாமதம் ஆகும் என அந்த ஆணையம் கூறியதாக சீமான் குறிப்பிட்டார்.
எனவே, இடைத்தேர்தலுக்கு மட்டும் ஒலிவாங்கிச் சின்னத்தைப் பயன்படுத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயி சின்னத்தைப் பெற்று அதையே தங்கள் கட்சியின் நிரந்தரச் சின்னமாக பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் சீமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.