சென்னை: நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக சீமானுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அண்மை காலமாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் கூண்டோடு விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியனும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதிய ஐந்து பக்கக் கடிதத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: “கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகளாகியும், கட்சியின் அமைப்பை கட்ட நீங்கள் கவனம் செலுத்தவில்லை. நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்டவர்கள், உங்களுக்கு வலிய வந்து ஆதரவு கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த கருத்துக்கெல்லாம், சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தெரிவிக்கவில்லை.
“நாதகவில் எந்த ஜனநாயகமும் இல்லை. வலதுசாரி ஆதரவு கருத்துக்கு சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில், பிரசாந்த் கிஷோரை விட பாண்டே அறிவுமிக்கவர் என்றும், பைத்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரிகர ராஜ சர்மா என்றும் நீங்கள் பேசுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுகிறேன்,” என்று ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.