ஈரோடு: ஈரோடு மாவட்டம், நாகமலை குன்றினை தமிழகத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பல்லுயிர் பாரம்பரியத் தலங்கள் என்பவை, தனித்துவமான, நலிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும்.
கிட்டத்தட்ட 32.23 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட நாகமலை குன்று இடம்பெயர்ந்து வரும் பறவைகள், உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட பல்வேறு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது.
அங்குள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள், பாறைப் பகுதிகள் ஆகியவை வளமான பல்லுயிர்களை ஆதரிக்கின்றன. 2024ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஆய்வுகளின்படி, இங்கே 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும் மற்றும் 88 உள்ளூர்), 7 பாலூட்டிகள், 11 வகை ஊர்வன, 5 வகை சிலந்திகள், 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.
இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து, பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும்.
இக்குன்று தொல்லியல், கலாசார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள், 400 ஆண்டுகள் பழைமையான ஆஞ்சநேயர் கல்வெட்டு உள்ளிட்டவை அவ்விடத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றுகின்றன.