மீண்டும் நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து தொடக்கம்

1 mins read
72500e7d-62bf-4467-bc12-e8437eb7c1b4
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால், புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை, குறைந்த அளவிலான பயணிகள் வருகை ஆகியவற்றைக் காரணம் காட்டி சேவை தொடங்கிய சில நாள்களிலேயே கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் நிறுவனம் அறிவித்தது. அதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற பெயரிலான கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதைத்தொடர்ந்து இலங்கைக்கு சோதனை ஓட்டம் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. அது வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக கப்பல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், இக்கப்பலில் பயணிக்க விரும்புகிறவர்கள் sailindsri.com என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு தொடங்கிய வேகத்திலேயே சேவை நிறுத்தப்பட்டதால் அதிருப்தியில் இருந்த சுற்றுலா பயணிகள், மீண்டும் கப்பல் சேவை தொடங்க இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்