தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம்

1 mins read
56f6758f-1672-43f7-8c80-a5b3c74ecddb
பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் வென்ற நயினார் நாகேந்திரனுக்குச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) தங்களது விருப்பமனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக பாஜக தலைமையகமான சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக அமைப்புத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தியிடம், தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை அளித்தார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பத்துப் பேர் அவரை முன்மொழிந்து விருப்பமனுவில் கையொப்பமிட்டிருந்தனர்.

நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டுமே விருப்பமனு அளித்திருந்ததால் அவரது வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதியானது.

இந்நிலையில், சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட்டது.

நயினார் நாகேந்திரன் எட்டு ஆண்டுகளுக்குமுன் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்.

அவர் அதிமுக சார்பில் கடந்த 2001, 2011ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் மின்துறை, தொழிலாளர் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.

பின்னர் அவர் 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

குறிப்புச் சொற்கள்