சென்னை: கடந்த சில நாள்களாக நிலவிய எதிர்பார்ப்புகளின்படி, தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத் தலைவருக்கான போட்டியில், அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, தருண் சுக் ஆகியோர் அறிவித்தனர்.
மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு அளித்திருந்ததால் அவர் தமிழக பாஜக தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
அண்ணாமலைக்குப் புதிய பொறுப்பு:
தமிழக பாஜகவின் 67 கட்சி மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, சரத்குமார், சசிகலா புஷ்பா, கனக சபாபதி, அஸ்வத்தாமன், வினோஜ் பி செல்வம், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோரும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
திருநெல்வேலிக்கு அருகே உள்ள பணகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன். பட்டமேற்படிப்பை முடித்தவர்.
குடும்பத் தொழில்களைக் கவனித்து வந்த இவரை, அப்பகுதி மக்கள் பண்ணையார் என்றே குறிப்பிடுகிறார்கள்.
கடந்த 1989ஆம் ஆண்டு 29 வயதில் அதிமுகவில் இணைந்த இவருக்கு பணகுடியின் நகர செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது.
பின்னர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற அவர், 2001ஆம் ஆண்டு தாம் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலியில் நின்று வெற்றி பெற்றார்.
2001 - 2006 வரையிலான ஆட்சியில் தொழில்துறை, மின்சாரம், போக்குவரத்து என மூன்று துறைகளுக்கு அடுத்தடுத்து மாற்றப்பட்டு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அண்ணாமலை புயல், நான் தென்றல்: நயினார்
மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜக நிர்வாகிகள் இடையே பேசிய நயினார் நாகேந்திரன், உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜகவின் கட்சிக் கொடி தமிழகம் முழுவதும் பறக்க வேண்டும் என்றார்.
“அண்ணாமலையின் பாணி வேறு. எனது பாணி வேறு. அவர் புயல். நான் தென்றலாகத்தான் இருக்க முடியும்,” என்றார் நயினார் நாகேந்திரன்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓராண்டுக் காலத்துக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவதே என் முன் இருக்கும் சவால். டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கின்றனர்’’ என்றார்.