‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் இனி வாரம் இருமுறை நடைபெறும்

1 mins read
adc00b0e-5987-4547-b5a0-a3edbb095fb2
சென்னை ஐயப்பன்தாங்கலில் சனிக்கிழமை (டிசம்பர் 6) நடந்த சிறப்பு மருத்துவ முகாமைப் பார்வையிட்ட தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். - படம்: எக்ஸ்/மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்களை இனி வாரம் இருமுறை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை அந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், அண்மையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அத்திட்டம் குறித்து மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாகத் தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஐயப்பன்தாங்கலில் சனிக்கிழமை (டிசம்பர் 6) நடந்த அம்மருத்துவ முகாமைப் பார்வையிட்ட திரு சுப்பிரமணியன், “இனி வாரந்தோறும் வியாழக்கிழமையும் சனிக்கிழமையும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடைபெறும்,” எனத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தச் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.

பதினெட்டு வாரங்களில் மொத்தம் 1,256 முகாம்களை நடத்துவதென இலக்கு வகுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 678 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவிட்டன. அவற்றின்மூலம் இதுவரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மருத்துவ முகாம்களின்போது, காஞ்சிபுரத்தில் மட்டும் அறுவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் குறிப்பிட்டார். அத்துடன், புதிதாகச் சிலர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம், மனநலப் பிரச்சினைகள், இதய நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறப்புத் தேவையுடைய குழந்தைகள், உடற்குறையுள்ளோர், பழங்குடிகள், சமூக, பொருளியல் நிலையில் பின்தங்கியிருப்போர் ஆகியோருக்கும் அம்மருத்துவ முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்