நாமக்கல்: புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக அரசியல் உள்நோக்கத்தோடு சமூக ஊடகங்களில் புரளிகளைப் பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா எச்சரித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பாலம் ஒன்றின் பல்வேறு பகுதிகளில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்த சில மணி நேரங்களில் விரிசல்கள் காணப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
கன்னியாகுமரி – சென்னை தொழில்துறை திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.424 கோடியில் கட்டப்பட்ட இந்த பாலத்திற்கான பணிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கின.
பின்னர் நிதிப் பற்றாக்குறையால் தாமதமாகி, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டால் புத்துயிர் பெற்றது.
இருந்தபோதும், பாலம் திறக்கப்பட்ட சில மணி நேரத்துக்குப் பிறகு, பாலத்தில் விரிசல்கள் காணப்பட்டதாகத் தகவல் பரவத் தொடங்கியது.
இதனால் கட்டுமான தரம் குறைவாக இருக்கலாம் என்று பல்வேறு அரசியல் தரப்புகளிலிருந்து அனுமானம் எழுப்பப்பட்டது.
இது குறித்து சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தவறு என்று கூறிய ஆட்சியர் உமா, இதற்குப் பின்னால் தமிழக அரசின் திட்டங்களை மாசுபடுத்தும் சதி இருப்பதாகக் குறைகூறினார்.
அனைத்துலக தரநிலைகளைப் பின்பற்றி, தகுந்த மேற்பார்வை குழுவின் கண்காணிப்பில் பாலம் கட்டப்பட்டதாகக் கூறிய திருவாட்டி உமா, அனைத்து கட்டங்களிலும் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஒப்பந்ததாரர் இந்தப் பாலத்தைப் பராமரிக்கும் பொறுப்பை அடுத்த 7 ஆண்டுகளுக்கு எடுத்துள்ளார்.
பாலத்தின் ஒரு பகுதி ரயில்வே துறையின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது, என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்குமுன் கடந்த பிப்ரவரியில் ஏறத்தாழ 150 டன் எடையுடன் சோதனை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்தப் பாலம் முழுமையாக பாதுகாப்பாகவும் தரமாகவும் உள்ளது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றார்.
பாலம் பயணத்திற்கு முற்றிலும் தகுந்தது எனக் குறிப்பிட்ட திருவாட்டி உமா, பொதுமக்கள் பயப்படாமல் இந்தப் பாலத்தை முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று கூறினார்.
மத்திய, மாநில அரசுகளின் பணிகளை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.