போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டைப் பெற்று இந்தியாவுக்குப் பயணம் செய்த பங்ளாதேஷ் நாட்டவர், திங்கள்கிழமை (ஜனவரி 23) கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
28 வயது ஜி.அன்வர் ஹுசேன், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் (யுஏஇ) சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு ஏர் அரேபியா விமானத்தில் திங்கள்கிழமை வந்திறங்கினார்.
"குடிநுழைவு அதிகாரிகளிடம் இந்திய கடவுச்சீட்டை அவர் வழங்கினார். அவர் கோல்கத்தாவில் வசிப்பதாக கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
ஹுசேன் கோல்கத்தா செல்லாமல் கோவைக்கு வந்திருப்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கோல்கத்தா செல்லாமல் கோவை வந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் அவரிடம் கேட்டனர்.
அதற்கு ஹுசேன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவருடைய ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்திய அரசாங்கம் வழங்கிய பிறப்புச் சான்றிதழையும் ஆதார் அட்டையையும் ஹுசேன் காட்டினார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த குடிநுழைவுப் பிரிவு அதிகாரி, தேசிய கீதத்தை பாடச் சொன்னார். ஆனால் ஹுசேனால் பாட முடியவில்லை. தாம் பங்ளாதேஷை சேர்ந்தவர் என ஹுசேன் ஒப்புக்கொண்டார்.
2018ல் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், அவிநாசிக்கு வந்த ஹுசேன், 2020 நவம்பர் வரை தனியார் நிறுவனம் ஒன்றில் தையல்காரராக பணிபுரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
"அங்கிருந்து பெங்களூரு சென்ற ஹுசேன், முகவர்கள் சிலரின் உதவியுடன் போலி பிறப்புச் சான்றிதழைத் தயார்செய்து, பின்னர் ஆதார் அட்டையையும் பெற்றார்," என்றார் அந்த காவல்துறை அதிகாரி.
ஆதார் அட்டையையும் இதர போலி ஆவணங்களையும் சமர்ப்பித்து, 2020 டிசம்பரில் கோல்கத்தாவில் இந்திய கடவுச்சீட்டை ஹுசேன் பெற்றார்.
"பின்னர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் சென்ற அவர், தையல்காரராக வேலையில் சேர்ந்தார். அவிநாசியில் தங்குவதற்காக திங்கள்கிழமை அவர் கோயம்புத்தூர் வந்தார்," என்றார் அந்த அதிகாரி.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், ஹுசேனை கோவை பீளமேடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர் மீது வெளிநாட்டவர் சட்டம் மற்றும் கடவுச்சீட்டுச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

