சென்னை: தேசியக் கல்விக்கொள்கை தமிழகத்துக்குத் தேவையில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கி அவர் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலப் பாடத் திட்டமே சிறப்பானது என்றார்.
நடப்பாண்டில் தமிழக அரசுப் பள்ளிகளில் நான்கு லட்சம் மாணவ, மாணவியரைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை 1.52 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இருமொழிக் கொள்கை என்பது, தவெக அரசின் மரபணுவில் உள்ளதாகவும் அதனால்தான் சட்டபூர்வமாகத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் திரு ராஜ்மோகன் கூறினார்.
மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கவும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எளிமையாகப் புரியவைக்கவும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார் அவர்.
“மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி மன்றம் தொடக்கப்பள்ளிகளில் 1, 2, 3ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அற்புதமாக வடிவமைத்துள்ளது. அவற்றில் உள்ள அழகழகான வண்ணப்படங்கள் குழந்தைகளை மிகவும் கவரும். அந்தப் புத்தகங்களைக் குழந்தையை அள்ளியெடுப்பது போன்று அள்ளி எடுத்தேன்.
“அதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எல்லாம் நமக்குத் தேவையில்லை. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி மன்றத்தின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாநிலப் பாடத்திட்டமே சிறந்தது. அதுவே போதுமானது,” என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.
தொடர்புடைய செய்திகள்
தாம் அமைச்சராகப் பொறுப்பேற்றதும் அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி, தண்ணீருடன் கூடிய பாதுகாப்பான கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் பெரம்பலுாரில் மாதிரிப் பள்ளிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்குமான அரசுக் கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிட்டார்.

