தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேஜ கூட்டணித் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட வாய்ப்பு

2 mins read
91fcb803-5348-4f2b-bfe8-bf5282d07f12
நயினார் நாகேந்திரன். - படம்: ஊடகம்

புதுடெல்லி: தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லையெனில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படக்கூடும். அவரது நியமனம் குறித்து ஓரிரு நாள்களில் பாஜக மேலிடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, மத்தியில் ஆளும் பாஜகவின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அதையடுத்து, இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர்.

மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என அண்ணாமலை அறிவிக்கும் அளவுக்கு மோதல் முற்றியது.

இந்நிலையில், அரசியல் கள மாற்றங்கள் காரணமாக மீண்டும் அதிமுக, பாஜக இடையே கூட்டணி உருவாக உள்ளதாகவும் இதனால் அண்ணாமலை பதவி விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய பாஜக மாநிலத் தலைவரைத் தேர்வு செய்வது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை, எச்.ராஜா என தலைவர் பதவிக்குப் பலரது பெயர்களை பாஜக மேலிடம் பரிசீலிப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிலையில், அந்நிகழ்ச்சிக்குச் சென்ற நயினார் நாகேந்திரனுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மேடையில் இருக்கையும் ஒதுக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் நயினார் நாகேந்திரன் திங்கட்கிழமை இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். பாஐக தேசிய தலைமை விடுத்த அழைப்பின் பேரில், அவர் அங்கு சென்றுள்ளதாகவும் தமிழக பாஜக தலைவராக அவர் ஓரிரு நாள்களில் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அண்ணாமலையைத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் பலரும் தொண்டர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாஜக மேலிடம் மாற்றுத் திட்டம் குறித்தும் யோசிப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பார் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம், வரும் 18ஆம் தேதி பெங்களூருவில் தொடங்க உள்ளது. அப்போது பாஜக தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அச்சமயம் தமிழக பாஜக தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்