சென்னை: ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் திருட்டு, பாலியல் குற்றங்களுக்கு அவற்றின் அருகில் உள்ள மதுக்கடைகளே காரணம் என்று ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.
ரயில் பயணியரிடம் திருட்டு, பெண் பயணியருக்கு பாலியல் வன்கொடுமை, ரயில் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
சென்னை கிண்டி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, கொருக்குப்பேட்டை, அம்பத்துார், சைதாப்பேட்டை, ஊரப்பாக்கம், ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, விண்ணமங்கலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திண்டிவனம் உட்பட 60க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் அருகில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அக்கடைகளில் மது அருந்திவிட்டு ரயில் நிலையங்களுக்குள் நுழைவோர் பயணியரிடமிருந்து கைப்பேசிகள், நகைககளைத் திருடுவது, பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு இழைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக தினமலர் போன்ற ஊடகங்கள் கூறுகின்றன.
ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இரவு 7:00 மணி முதல் 1:00 மணி வரை ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளில் சிலர் மது அருந்துகின்றனர் என்றும் பிறகு சிலர் மதுபோதையில் பயணியரிடம் ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
குற்றம் நிகழ்ந்தால் மட்டுமே ஒரு வார காலத்துக்குப் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றன; அதற்குப் பிறகு அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகளை அதிகம் பார்க்க முடியாது என்று பெண்கள் சொல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்தி ரயில் நிலையங்களில் நிரந்தரமாகக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பெண்கள் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த ரயில் பாதுகாப்புப் படையினர், ரயில் நிலையங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருப்பது ரயில்கள், ரயில் நிலையங்களில் குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது எனக் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
ரயிலில் அடிபட்டு இறந்தவர்களில் பலர், மதுபோதைப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் என்றும் அவர்கள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் சிக்குகின்றனர் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படை குறிப்பிட்டது.
அதேபோல், அதிக போதையில் இருப்போர் ஓடும் ரயில் மீது கல் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள 40க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியலை அளித்து அவற்றை இடமாற்றம் செய்யுமாறு தமிழக அரசுக்குத் தாங்கள் பரிந்துரை அளித்திருப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படை சொன்னது.