ரயில் நிலையங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை

ரயில் நிலையங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை

1 mins read
a0f5f8c8-7359-427b-93a2-9b506cbeec5c
தமிழ்நாடு அரசு நடத்தும் மதுக்கடை. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மதுபோதையில் ரயில்வே சொத்துகள் சேதப்படுத்தப்படுவதற்கு ரயில் நிலையங்களுக்கு அருகில் அரசு மதுக்கடைகள் (டாஸ்மாக்) இருப்பதே முக்கியக் காரணம் என ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

ரயில்வே சொத்துகள் சேதப்படுத்தப்படுவது குறித்தும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது குறித்தும் ரயில்வே பாதுகாப்புப் படைக்குப் பல புகார்கள் வந்தன.

அதனைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை விரிவான ஆய்வு மேற்கொண்டது.

அதில், ரயில்மீது கல் வீசுதல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து விளக்குகள் சேதம், பயணிகளின் உடைமைகள் திருட்டு போன்ற குற்றங்களுக்கு சென்னையிலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு மதுக்கடைகளும் மதுக்கூடங்களும் முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது.

அதன் தொடர்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை கோட்டத்தின் புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் 39 அரசு மதுக்கடைகளை ரயில்வே பாதுகாப்புப் படை அடையாளம் கண்டுள்ளது.

அந்தக் குறிப்பிட்ட மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரயில்வே பாதுகாப்புப் படை கடிதம் எழுதியுள்ளது.

கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அரசு மதுக்கடைகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, ரயில் நிலையங்கள், முக்கியப் போக்குவரத்துச் சந்திப்புகளுக்கு அருகிலும் மதுக்கடைகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்