பாதி எரிந்த நிலையில் மாவட்ட காங்கிரஸ் தலைவரின் சடலம் மீட்பு

பாதி எரிந்த நிலையில் மாவட்ட காங்கிரஸ் தலைவரின் சடலம் மீட்பு

2 mins read
fff9e126-0ab1-440c-a7be-9d8817096748
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திரு கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருநெல்வேலி: தமிழ்நாட்டின் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் காணாமல் போன நிலையில், அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 2ஆம் தேதி மாலையில் வீட்டைவிட்டு வெளியே சென்ற திரு ஜெயக்குமார், இன்னும் வீடு திரும்பவில்லை என்றும் அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கூறி, அவரின் மகன் கருத்தையா ஜாப்ரின், உவரி காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, காவல்துறை திரு ஜெயக்குமாரைத் தேடி வந்தது.

இந்நிலையில், திரு ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்திலிருந்தே அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.

முன்னதாக, கடந்த மாதம் 30ஆம் தேதி தனக்கு நேரிலும் தொலைபேசி வழியாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் உட்பட சிலரது பெயர் விவரங்களை எழுதியும் நெல்லை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சிலம்பரசனுக்குத் திரு ஜெயக்குமார் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.

தேர்தலின்போது செலவழித்த பணத்தைத் திரும்பக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கட்டுமானப் பணியை மேற்கொண்டு, பின்னர் அதற்கான பணத்தைத் கேட்டதற்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தன் வீட்டின் முன்பாக இரவு நேரங்களில் முன்பின் அறியாத சிலர் சுற்றித் திரிவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரிக்கப்படும் என்று நெல்லை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திரு ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரே உயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்று காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுகாங்கிரஸ்அரசியல்