நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்: சாதி சின்னங்களைப் பயன்படுத்த தடை

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்: சாதி சின்னங்களைப் பயன்படுத்த தடை

1 mins read
34399b9e-77ae-4732-b3c4-d3d3e4189dbb
நெல்லையப்பர் காந்திமதியம்மாள் கோவில் ஆனிப் பெருந்தேரோட்டத் திருவிழா. - படம்: கல்கி ஆன்லைன்

நெல்லை: தேர்த் திருவிழாவின்போது சாதி ரீதியான கொடி, சின்னங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை காவல்துறை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நெல்லை நகரப் பகுதியில் உள்ள நெல்லையப்பர் காந்திமதியம்மாள் கோவில் ஆனிப்பெருந்தேரோட்டத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், நெல்லை நகரப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏதும் நிகழாமல் அமைதியான முறையில் தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை காவல்துறை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேரோட்டத் திருவிழா பாதுகாப்பில் 1,200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். தேர் திருவிழாவின்போது சாதி ரீதியான கொடி, சின்னங்கள், டி-சட்டைகள், கயிறுகள் உள்ளிட்ட எதையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சமூக வலைத்தளத்தில் சாதி ரீதியான பதிவுகளை வெளியிட்டது தொடர்பாக நெல்லை நகர காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர் திருவிழாவில் சாதி அடையாளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. இதை மீறி யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தேரோட்டம்சாதிநடவடிக்கை