தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைதிகளின் கைப்பேசிப் பயன்பாட்டை முடக்க வலையமைப்புக் கோபுரங்கள்

2 mins read
d02cfc57-199b-4398-a781-bf2fc5a06173
இந்தியாவிலேயே முதலாவதாக, கைப்பேசி செயல்பாட்டை முடக்க திகார் மத்திய சிறையில் ‘டாமினன்ட் டவர்ஸ்’ தொழில்நுட்ப முறை அறிமுகம் செய்யப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: தமிழகச் சிறைகளில் கைப்பேசித் தொடர்பை முற்றிலுமாக முடக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வலையமைப்புக் கோபுரங்கள் (நெட்வொர்க் டவர்ஸ்) அமைக்கப்பட உள்ளன.

புழல் சிறையில் மட்டும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் கைதிகள் பயன்படுத்திய 101 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 141 பேர்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 34 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 56 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அண்மையில் புழல் சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத வழக்குகளில் கைதான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரிடமிருந்து மூன்று கைப்பேசிகளின் உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நாட்டிலேயே முதலாவதாக, திகார் மத்திய சிறையில் அறிமுகம் செய்யப்பட்ட ‘டாமினன்ட் டவர்ஸ்’ தொழில்நுட்ப முறையைத் தமிழக சிறைகளில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதலில் புழல் சிறையில் சோதனை அடிப்படையில் இக்கோபுரங்கள் நிறுவப்படும்.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் டாமினன்ட் தொழில்நுட்பக் கோபுரங்கள், அனைத்து வகை அலைவரிசை கைப்பேசிச் சேவைகளுடன், கைப்பேசிச் சேவை சார்ந்த குறுஞ்செய்தி, இணையதளத் சேவை உள்ளிட்ட அனைத்தையும் முடக்கும்.

தமிழக சிறைத் துறையின் கீழ் மொத்தம் 141 சிறைகள் உள்ளன. இவற்றில் தற்போது 20,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 70% விசாரணைக் கைதிகள், 30% தண்டனைக் கைதிகள்.

இந்தக் கட்டமைப்பில் மத்திய தொகுப்பில் பதிவேற்றப்பட்ட கைப்பேசி எண்களின் செயல்பாடு முடக்கப்படாது.

இத்தொழில்நுட்பம் மூன்று வகைகளில் செயலாற்றும். முதலாவது, கைப்பேசி அழைப்புகளை முற்றிலும் தடுப்பது, இரண்டாவது அழைப்புகளை அனுமதித்து கண்காணித்து அதுகுறித்த தகவல்களைப் பெறுவது, மூன்றாவது எந்த இடையூறுமின்றி அழைப்புகளைக் கட்டுப்பாடின்றி அனுமதிப்பது ஆகும்.

குறிப்புச் சொற்கள்