சென்னை: தொழிலதிபர் அதானியை தாம் ஒரு போதும் சந்திக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தி உள்ளார்.
தமிழகத்தில் அதானி குழுமம் பல்வேறு முதலீடுகளைச் செய்ய இருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பாக பாமக உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் அளித்தபோதே, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதானி குழும முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான புகார்கள் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
“அதானி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று இண்டியா கூட்டணிக் கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன.
“அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாமகவும் பாஜகவும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறேன்.
“தமிழகத்துக்கும் அதானி விவகாரத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
“தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எனினும் முதல்வரின் பதில் ஏற்கும் வகையில் இல்லை என பாமக உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து பாமக உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனால் பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.