சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பெரும்பாலும், நவம்பர் மாதத்தின் முதல் வார இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகக்கூடும் என்றும் நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
மேலும், ஆந்திராவையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், தேனி, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாள்களுக்குத் தமிழகத்தில் 17க்கும் அதிகமான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது.