மதுரை: தமிழகத்தின் மதுரைக்கும் இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே புதிதாக விமானச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கை - தமிழகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளதாக இந்து தமிழ் ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.
இலங்கையின் பலாலி விமானத்தளம், இந்தியாவின் உதவியோடு சில ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, அது யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் புதிய விமான நிலையத்திற்கு சென்னையில் இருந்து வாரந்தோறும் மூன்று நாள்கள் விமானங்கள் இயக்கப்பட்டன.
எனினும், கொரோனா பரவல் காலகட்டத்தில் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் திறக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் மூடு விழா கண்டது.
ஏறத்தாழ 34 மாதங்களுக்குப்பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை-யாழ்ப்பாணம் இடையே அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியது.
தொடக்கத்தில் வாரந்தோறும் மூன்று நாள்கள் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் பின்னர் அன்றாட விமானச்சேவையாக மாற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், செப்டம்பர் முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான அன்றாட விமானச் சேவையை தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கியுள்ள இந்தச் சேவையின் மூலம் நாள்தோறும் 52 பயணிகள் பயனடைய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
மதுரையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற முதல் விமானத்திற்கு அங்கு பெருவரவேற்பு அளிக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

