சென்னை: தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீக, சுற்றுலாத் தலமான ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்திற்காக ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கனேரி பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 600 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்க, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ராமேசுவரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முன்னாள் அதிபர் அப்துல் கலாம் நினைவிடம் ஆகிய இடங்களைப் பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
தற்போது சாலை, ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ள நிலையில், அப்பகுதியில் பொருளியல், சுற்றுலாத்துறையை மேம்படுத்த விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது.
இத்திட்டத்திற்காகப் பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம், களரி, மாணிக்கனேரி ஆகிய ஐந்து இடங்களை வல்லுநர் குழு கள ஆய்வு செய்தது. அதில் இந்திய விமான நிலையங்கள் ஆணையக் குழுவின் ஆய்வுக்குப் பின், மாணிக்கனேரி பகுதி இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது.
தற்போது நிலம் கையகப்படுத்தும் முதற்கட்டப் பணிகள் முடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் முதன்மை அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்ட கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
