தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26.5 லட்சத்தில் புதிய பெட்டிகள்

2 mins read
d63dafea-67ed-45fe-baa2-39e87bf497f4
பழனி முருகன் கோவில் கம்பி வட வண்டியில் (ரோப் கார்) பொருத்தப்பட உள்ள புதிய பெட்டிகள், கோல்கத்தாவில் இருந்து பழனிக்கு கொண்டுவரப்பட்டு, மலை அடிவாரத்தில் உள்ள கம்பி வட வண்டி நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. - படம்: தமிழக ஊடகம்

பழனி: பழனி முருகன் கோவிலில் இயக்கப்படும் கம்பி வட வண்டியில் (ரோப் கார்) பொருத்தப்பட்டுள்ள பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய பெட்டிகளைப் பொருத்தும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக ரூ.26 லட்சத்து 50,000 செலவில் புதிய பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

மேற்குவங்க மாநிலம், கோல்கத்தாவில் இருந்து புதிய கம்பி வடப் பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில், “பழனி முருகன் கோவில் கம்பி வட வண்டியில் பொருத்துவதற்காக கோல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனம் 10 புதிய பெட்டிகளைத் தயாரித்துள்ளது. 290 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டியின் மதிப்பு ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். 10 பெட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

“விரைவில் கம்பி வட வண்டியில் உள்ள பழைய பெட்டிகள் அகற்றப்பட்டு புதிய பெட்டிகளைப் பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,” என்றனர்.

தைப்பூசத் திருவிழா அடுத்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காகத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பழனி மலைக்கோவிலை படிப்பாதை, யானைப் பாதை வழியாக பக்தர்கள் சென்றடைகின்றனர்.

மலைக்கோவிலுக்கு பக்தர்கள் விரைவாகச் செல்வதற்கு ஏதுவாக மின்இழுவை ரயில்களும் ரோப் கார்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

மின் இழுவை ரயில் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல எட்டு நிமிடம் ஆகும். ஆனால், கம்பி வட வண்டி மூலம் மூன்று நிமிடத்தில், பழனி மலையின் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம். இதனால் பெரும்பாலான பக்தர்களின் தேர்வாக கம்பி வட வண்டி உள்ளது.

குறிப்புச் சொற்கள்