ரூ.913 கோடியில் உயர்கல்வி, மருத்துவம், வீடமைப்புத் துறைகளில் புதிய கட்டடங்கள்

ரூ.913 கோடியில் உயர்கல்வி, மருத்துவம், வீடமைப்புத் துறைகளில் புதிய கட்டடங்கள்

2 mins read
74336b30-1121-4ddc-8ca9-38592c32d9db
ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) திறந்து வைத்தார். - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் கல்வி, வீடமைப்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மொத்தம் ரூ.913.21 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்களைத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் காணொளிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) திறந்து வைத்தார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், உயர்கல்வித் துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 51 கல்விசார் கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வந்தன. அவற்றுள் பல தொழில்நுட்பக் கல்லூரிகளில் ரூ.226.98 கோடி செலவிலும், சேலம், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ.6.08 கோடி செலவிலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ரூ.35.40 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், மின்னிலக்க நூலகங்கள் அடங்கும்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டன.

ரூ.525.75 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.525.75 கோடி செலவில் சென்னை, திருவள்ளூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 9 திட்டப்பகுதிகளின்கீழ் கட்டப்பட்டுள்ள 4,260 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் பெரம்பூரில் ரூ.1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தமும் பயன்பாட்டிற்கு வந்தது.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்ந்த ரூ.112.85 கோடி செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.710.50 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள 4 புதிய திட்டப் பணிகளுக்கும் விஜய் அடிக்கல் நாட்டினார்.

ரூ.113 கோடியில் மருத்துவக் கட்டடங்கள்

மேலும், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.113 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய மருத்துவக் கட்டடங்களையும் விஜய் தொடங்கி வைத்தார்.

அவற்றில், அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரூ.46 கோடி செலவிலும், சிவகாசி அரசு மருத்துவமனை ரூ.28.80 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.78 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம், 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்களும் இத்திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்