சென்னை: வடசென்னையில் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட பேருந்து நிறுத்தம் கொளத்தூரில் திறக்கப்பட்டுள்ளது.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், ரூ.1.61 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அந்தப் பேருந்து நிறுத்தத்தை அமைத்தது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த 2,007 குடியிருப்பாளர்களுக்கு இலவச வீட்டுமனை ஆவணங்களை வழங்கினார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 40.59 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலையோரப் பூங்கா, 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு நியாய விலைக் கடைகள், 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன பயணிகள் நிழற்குடை ஆகியவற்றையும் திரு ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலையில், 40.59 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை, இருக்கை வசதிகள், குடிநீர், கழிவறை வசதிகள், கண்காணிப்புக் கேமராக்கள், வாகன நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
திரு.வி.க. நகர் மண்டலம், ரெட்டேரி சந்திப்பில் 25 லட்சம் ரூபாய் செலவில் 30 பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள், மின்விசிறிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன பயணியர் நிழற்குடை என மொத்தம் 1 கோடியே 75 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் நிறைவடைந்த பணிகளைத் திரு ஸ்டாலின் திறந்து வைத்தார்.

