சென்னை: உலகத்தர வசதிகளுடன் சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என தமிழக அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு பல முக்கியமான திட்டங்களையும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26ஆம் ஆண்டிற்கான தமிழக வரவுசெலவுத் திட்டம் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளியலைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றார்.
“வரவு, செலவுத் திட்டங்கள் தொர்பாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் தமிழகத்தை வழிநடத்துவோம்,” என்றார் தங்கம் தென்னரசு.
சென்னைக்கு அருகே அமைய உள்ள புதிய நகரமானது தகவல் தொழில்நுட்பம், பசுமை மின்சக்தி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக அமையும்.
சுமார் 2,000 ஏக்கரில் புதிய நகரம் அமையும் என்றும் நாட்டிலேயே அதிக நகரமயமாதல், அதனுடன் எழும் சவால்களைச் சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால், உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள், குடிநீர், தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படைத் தேவைகளையும் பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கிட, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன,” என்றும் தங்கம் தென்னரசு மேலும் தெரிவித்தார்.