தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புது சர்ச்சை: இந்திய ரூபாய் குறியீட்டைப் புறக்கணித்த தமிழக அரசு

1 mins read
f4be30ab-baaa-4cde-a4b1-847a55335a1f
இந்திய ரூபாய்க்கு ₹-என்ற தனிக்குறியீடு கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமானது. இதை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். - சித்திரிப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசு மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், இந்திய ரூபாய் குறியீடான ₹-இடம்பெறவில்லை. அதற்குப் பதில் ‘ரூ’ என்பது இலச்சினையாக இடம்பெற்றது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் ‘சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என வரவுசெலவு திட்டத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ‘ரூ’ என்ற இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இந்திய ரூபாய்க்கு ₹-என்ற தனிக்குறியீடு கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமானது. இதை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். இவர் திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் ஆவார்.

கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட இந்தக் குறியீட்டை முதன்முறையாக ஒரு மாநிலம் புறக்கணித்திருக்கிறது.

இதனால் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுக்கும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மொத்த இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரூபாய் தாள், நாணயத்தில் இணைக்கப்பட்ட இலச்சினையை திமுக நிராகரித்துள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

“முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை முதலில் தமிழ் பெயராக மாற்றிக் கொள்ளட்டும். திமுக அரசின் அனைத்து தோல்விகளையும் மறைக்க இந்த நாடகம் தொடர்கிறது,” என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்