சென்னையை மிரட்டும் புதிய புயல்

2 mins read
d4bdd0cf-0ad4-4ee1-8a1c-98fcaec0b683
புதிய புயல் சின்னத்தால் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டிசம்பர் 1ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ‘சென்யார்’ என்று பெயரிடப்பட்ட புயல் கடந்த புதன்கிழமை இந்தோனீசியாவில் கரையைக் கடந்தது. அதனால் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் இப்போது ‘டித்வா’ என்னும் புயல் அச்சுறுத்துகிறது.

இந்தப் புயல் தமிழகத்தின் சென்னைக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

‘சென்யார்’ புயலுக்குப் பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறி தமிழகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

அதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் தாக்கம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

‘சென்யார்’ புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இப்போது புதிய புயல் சின்னத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டிசம்பர் 1ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கைக் கடற்கரையில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை நிலையம் அதன் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை பதிவிட்டுள்ளது.

இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்காக அந்த மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு நிலையம் அறிவுறுத்தி உள்ளது. பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ‘தமிழ் நாடு வெதர்மேன்’ என்றழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், இது குறித்த கணிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இப்போது உருவாகியுள்ள புயல் அறிகுறியால், டெல்டா பகுதி முதல் சென்னை வரையில் 99 விழுக்காடு கனமழை பெய்யலாம். நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினம் முதல் சென்னை வரை கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக மலாக்கா நீரிணைப் பகுதியில் நிலவிய ‘சென்யார்’ என்று பெயரிடப்பட்ட புயல், தமிழகத்தை அச்சுறுத்தியது. அது இந்தோனீசியாவில் புதன்கிழமை காலையில் (நவம்பர் 26) கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்