ஆளுநர் பதவி ஏற்பு: தமிழக அரசு-ஆளுநர் மாளிகை உறவில் புதிய அத்தியாயம்

ஆளுநர் பதவி ஏற்பு: தமிழக அரசு-ஆளுநர் மாளிகை உறவில் புதிய அத்தியாயம்

2 mins read
7173dcaa-1410-4817-9756-945dbd129cb6
ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் சில அமைச்சர்களும் கலந்துகொண்டனர். - படம்: சமூக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் வியாழக்கிழமை (மார்ச் 12) காலை பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆளுநர் நியமனக் கடிதத்தை வாசித்த பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, ஆளுநர் மாளிகையில் திரு ஆர்.வி. ஆர்லேகரை தலைமை நீதிபதியும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் வரவேற்றனர்.

தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் எம். அப்பாவு, அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பி.கே. சேகர் பாபு, எஸ். ரகுபதி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆளுநர் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கேரள மாநில ஆளுநரைப் பொறுப்பையும் வகிக்கும் திரு ஆர்.வி. ஆர்லேகர், தமிழ்நாட்டின் 27வது ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

கடந்த வாரம் வரை தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் வியாழக்கிழமை அந்த மாநிலத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வெறும் ஒரு பதவி ஏற்பு விழாவாக மட்டுமன்றி, தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

கோவாவைச் சேர்ந்த ஆர்.வி. ஆர்லேகர், ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்றாலும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகாரில் ‘மக்களின் ஆளுநர்’ என்று பெயரெடுத்தவர்.

கோவா சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தபோது காகிதமில்லா சட்டமன்றத்தைக் கொண்டு வந்தவர் ஆர்லேகர்.

பீகாரில் பல்கலைக்கழக வேந்தராக அவர் செய்த சீர்திருத்தங்கள் அம்மாநில அரசால் பாராட்டப்பட்டன. தற்போது கேரள ஆளுநராக இருக்கும் அவர், அந்த மாநில அரசுடன் இணக்கமான போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்