சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் விநியோகத்தை நவீனப்படுத்தவும், தடையற்ற தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்யவும் ரூ.3,108.55 கோடி மதிப்பிலான புதிய ‘வட்டப்பாதை பிரதான குழாய்’ திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
தற்போது சென்னை குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீரை விநியோகம் செய்து வருகிறது.
இருப்பினும், நகரின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி குழாய் அமைப்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஒரு பகுதியில் தட்டுப்பாடு ஏற்படும்போது மற்றொரு பகுதியில் உள்ள உபரி நீரை அங்கு கொண்டு செல்வதில் தொழில்நுட்ப சிக்கல்கள் நீடிக்கின்றன.
இந்தக் குறையைப் போக்கவே ‘ரிங் மெயின்’ எனப்படும் வட்டப்பாதை பிரதான சுற்று குழாய்த் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நகரின் அனைத்து குடிநீர் ஆதாரங்களும் ஒன்றிணைக்கப்படும்.
இதன்மூலம் ஒரு பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால், அதனைப் போக்கும் வகையில் மற்றொரு பகுதியிலிருந்து தண்ணீரை உடனடியாகத் திருப்பிவிட முடியும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களுடன் இந்த சுற்றுக் குழாய் இணைக்கப்படும்.
இத்திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ரூ.3,108 கோடி மதிப்பீட்டில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்பாட்டு, பராமரிப்புப் பணிகளும் அதில் அடங்கும்.
இப்பணிகள் அனைத்தும் 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிறைவேற்றப்பட உள்ளன.
நெசப்பாக்கம் பகுதிக்கு ரூ.689 கோடி
குடிநீர் திட்டம் ஒருபுறமிருக்க, நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.689.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணிகளால் அப்பகுதியில் உள்ள சுமார் 1.16 லட்சம் குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெறுவர்.
இப்பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

