சென்னை: இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது பன்னோக்கு கப்பல் ‘சமர்த்தக்’ சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து கடலில் செலுத்தப்பட்டது.
இந்திய கடற்படைக்காக ‘எல் அண்ட் டி’ கப்பல் கட்டும் நிறுவனம் கட்டிய முதலாவது பன்னோக்கு கப்பல் இதுவாகும். இதுபோல 2 கப்பல்கள் கட்ட அந்த நிறுவனத்துடன் கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் இது முதலாவது கப்பலாகும்.
இக்கப்பலை கடற்படை மரபுகளின்படி, கடற்படை தளபதியின் மனைவியும் கடற்படை மனைவியர் நலச்சங்க தலைவருமான சசி திரிபாதி கடலுக்குள் செலுத்தினார்.
கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இந்த கப்பலுக்கு, ‘ஆதரவாளர்’ என்று பொருள்படும் வகையிலும், கடற்படைக்கு பல்வேறு வகைகளிலும் இது உதவிகரமாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையிலும் ‘சமர்த்தக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பல்நோக்குக் கப்பல்கள் இழுவைக் கப்பலாகவும் ஆளில்லா தானியங்கி வாகனங்களை இயக்குவதற்கான தளமாகவும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுவரும் பல்வகை ஆயுதங்கள், உணர்கருவிகள் போன்றவற்றின் சோதனைத் தளமாகவும் செயல்படும்.
இந்த பல்நோக்கு கப்பல் மணிக்கு சுமார் 27 கி.மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இது 106 மீட்டர் நீளமும் 16.8 மீட்டர் அகலமும் கொண்டது. ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘இந்தியாவில் உற்பத்தி’ என்னும் இந்திய அரசின் இலக்குகளுக்கு இணங்க, இந்தக் கப்பல் உள்நாட்டில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

