ராமேசுவரம்: புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்க உள்ள நிலையில், அந்தப் பாலம் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் என்று ரயில்வே பாலம் கட்டுமான நிறுவன ஆலோசகர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பாலத்தின் நடுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி தொழில்நுட்பம் நாட்டிலேயே முதல்முறையாக பாம்பனில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பாம்பன் பாலத்தில் தற்போது 75 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாலத்தின் நடுப்பகுதியில் மட்டும் 50 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
பழைய பாம்பன் பாலத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதற்கிடையே, பாம்பன் ரயில் பாலத் தொடக்க விழாவையொட்டி, பிரதமர் மோடி ராமேசுவரத்துக்கு வருகைதர இருப்பதையடுத்து அங்குள்ள மீனவர்கள் மூன்று நாள்கள் கடலுக்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஏப்ரல் 6ஆம் தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் கூறின.
மேலும், நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை பாம்பன் குந்துக்கால் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்துமாறும் மீன்வளத் துறையினர் மீனவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

