செங்கல்பட்டு: வீட்டுமனைப் பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, இனி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு இணையத்தளம் வழி முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறையை எளிதாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏனெனில், இதன் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை வருவாய் கிராம ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிய கட்டணத்தைச் செலுத்திய பின் உரிய ஆவணங்களை அளித்தால் ஒற்றைச் சாளர முறையில் உரிய அனுமதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், “மனைப்பிரிவு, கட்டடங்களுக்கான அனுமதியை இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பம் செய்து அனுமதி பெறவேண்டும்,” என தமிழக அரசு அறிவித்துள்ளது.