அடித்தள நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்துவதில் அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில், மக்கள் கழகம் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகங்களுக்கு அதிக பங்களிப்பை வழங்க ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வெளியிட்டது.
மக்கள் கழகம் 2030 (PA Community 2030) திட்டத்தின் கீழ், தொண்டூழியத்தை ஊக்குவித்தல், சமூகப் பங்காளிகளின் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், அண்டை வீட்டாரிடையே நெருக்கமான உறவுகளை வளர்த்தல் ஆகியவற்றை கழகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நமது தெம்பனிஸ் நடுவத்தில் நடைபெற்ற மக்கள் கழக வருடாந்தர சமூகக் கருத்தரங்கில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் இத்திட்டத்தை அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொண்டூழியர்கள், அடித்தளத் தலைவர்கள், சமூக பங்காளிகள் என ஏறத்தாழ 2,000 பேர் பங்கேற்றனர்.
தனிப்பட்ட கடப்பாடுகளாலும், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகம் இணையம் வழி இடம்பெறுவதாலும் சமூகம் மேலும் சுயசார்பு அடைந்துவருவதாலும் மக்கள் கழகம் அதன் சமூகத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் சவால்களை எதிர்கொண்டதை திரு டோங் ஒப்புக்கொண்டார்.
“இந்த மாற்றங்கள், பரிணாமங்கள் அனைத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும், இந்தப் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எங்கள் சொந்த அணுகுமுறையையும் நாங்கள் பலப்படுத்தியுள்ளோம்,” என்று மக்கள் கழகத் துணைத் தலைவருமான திரு டோங் கூறினார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் சமூகம் 2030 திட்டத்தைத் தொடங்கிய திரு டோங், சமூக ஈடுபாட்டைத் தூண்டுவதற்கான பல முயற்சிகளை அறிவித்தார்.
இளையர்கள் முன்வருவதற்கும், அவர்கள் அக்கறை செலுத்தும் சமூகப் பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களைத் தூண்டி, அணிதிரட்டவும் மக்கள் கழகம் 2025ஆம் ஆண்டில் ஓர் இளையர் சாசனத்தை உருவாக்கும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், செப்டம்பர் 28 அன்று தேசிய சமூக தலைமைத்துவ கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் திரு டோங் அறிவித்த சமூக தலைமைத்துவ மேம்பாட்டு திட்டங்கள் இதில் அடங்கும்.
மக்களின் அதிகாரபூர்வமற்ற பங்களிப்பிற்காக, 2022ல் தொடங்கப்பட்ட அதன் சமூகத் தொண்டூழிய திட்டத்தையும் மக்கள் கழகம் தொடர்ந்து மேம்படுத்தும். இப்போது 15,000க்கும் மேற்பட்ட சமூகத் தொண்டூழியர்கள் உள்ளனர். அவர்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இளையர்கள்.
மக்கள் கழகத்தின் மேலும் புத்துணர்ச்சியூட்டும் இலக்கான, “அக்கறையுள்ள, ஒன்றுபட்ட சிங்கப்பூருக்கான சமூகப் பங்கேற்பைத் தூண்டி, வளர்ப்பது,” மற்றும் “எங்கள் சமூகத்திற்காக அக்கறை கொண்ட ஒரு தேசம்” எனும் தொலைநோக்கையும் அமைச்சர் எட்வின் டோங் வெளியிட்டார்.

