புதிய தலைமைச் செயலகம்: எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

புதிய தலைமைச் செயலகம்: எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

கோப்புப் படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

26 Sep 2026 - 6:48 pm

1 mins read

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏறக்குறைய ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் திட்டத்திற்கு எதிராக தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கடலோர ஒழுங்குமுறை மண்டல மதிப்பீடுகள், முறையான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் அனுமதி இன்றி கடற்கரையை ஒட்டிய பகுதியில் இத்தகைய பெரிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வாரியத்தின் விதிகள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைச் சூழலியல் மண்டலத்தில் மிகப்பெரிய கட்டடம் கட்டப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களும் கடலோரச் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பாகத் தேர்வு செய்யப்பட்ட இந்தத் திட்டப்பணிகளுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
தலைமைச் செயலகம்மனுகடற்கரைசுற்றுச்சூழல்