சென்னை: தமிழகத்தின் எதிர்கால நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் புதிய சட்டமன்றம், தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) அவர் மேலும் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
தலைமைச் செயலகம் இயங்கிவரும் ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நிலவும் கடும் இடப்பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள பெரும்பாலான இடங்கள் இந்தியப் பாதுகாப்புத் துறை, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கூடுதல் கட்டுமானங்களை மேற்கொள்ள இயலவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 40 ஆண்டுகளில் அரசுத் துறைகளின் பொறுப்புகளும் ஊழியர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளதால், அனைத்துத் துறைகளையும் ஒரே கூரையின்கீழ் கொண்டுவர ஒருங்கிணைந்த புதிய வளாகம் அவசியமாகிறது என்றார் திரு விஜய்.
புதிதாக அமைய உள்ள தலைமைச் செயலகம், பசுமைக் கட்டடத் தரநிலைகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், நவீன மாநாட்டு அரங்குகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் சேவை மையங்களுடன் உலகத்தரத்தில் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.
மேலும், புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மரபுச் சின்னமாகத் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’
முன்னதாக, சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ அமைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் விதி எண் 110ன்கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக விளையாட்டாளர்கள் அதிக பதக்கங்களை வெல்ல வழிவகுக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் உருவாக்கப்படும் என்றார்.
அதில் நவீன அரங்கங்கள், பயிற்சி மையங்கள், விளையாட்டு அறிவியல், மருத்துவ மையங்கள் உட்பட உயர்தர உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
’மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’
தமிழகத்தை அனைத்துலக விளையாட்டுச் சுற்றுலா மையமாக உயர்த்தும் வகையில், மாநிலத்தில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்நகரத்தில் பார்முலா 1, 2, 3, 4 உள்ளிட்ட அனைத்துலக கார் பந்தயங்களை நடத்தும் வகையிலான நவீன பந்தயத்தடங்களும் பயிற்சி வசதிகளும் உருவாக்கப்படும். இது இளையர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதோடு, சிறப்பு வாகன உற்பத்தி, வேலைவாய்ப்பு, மாநிலப் பொருளியல் ஆகியவற்றைக் கணிசமாக உயர்த்தும் என அவர் தெரிவித்துள்ளார்.


