தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய சூரிய மின்சக்தி ஆலை திறப்பு; 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு

2 mins read
646619ba-39e4-41cf-86ad-bcc135ba8200
டாடா பவர் சோலார் நிறுவனத்தைப் பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின். - படம்: தமிழக ஊடகம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழில்வளாகத்தில் ரூ.3,800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தியைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) தொடங்கிவைத்தார்.

அந்த ஆலை மூலம் ஏறக்குறைய 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், இருநாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு அவர் சென்றுள்ளார்.

தென்மாவட்ட மக்கள் வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் கங்கைகொண்டானில் வணிக உற்பத்திக்குத் தயார்நிலையில் உள்ள மிகப்பெரிய சூரிய மின்தகடு மற்றும் மாடுலர் தொழிற்சாலையைத் திரு ஸ்டாலின் திறந்துவைத்தார்.

புதிய தொழிற்சாலையின் ஊழியர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அதிகமான பெண்களைக் கொண்டு இயக்கப்படும் சூரிய மின்சக்தித் தகடு உற்பத்தி ஆலை என்ற பெருமையையும் இந்த ஆலை பெற்றுள்ளது.

இந்த ஆலையில் சூரிய மின்தகடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உயர்ந்த தரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சூரிய மின்தகடுகளும் மின்கலங்களும் கரிம வெளியீடற்ற பசுமை மின்சார உற்பத்திக்கான எதிர்காலத் தேவையைப் பூர்த்திசெய்யும் என நம்பப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “இது இந்தியாவிலேயே ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சூரிய மின்தகடு ஆலை,” என்றார் அவர்.

பின்னர் ரூ.3,125 கோடியில் அமைக்கப்படவுள்ள விக்ரம் சோலார் நிறுவனத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த நிறுவனத்தின் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

நெல்லை சென்றுள்ள முதல்வர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்