‘தமிழிகம்’ என்று பெயர் சூட்டப்பட்ட புதிய வகை விலாங்கு மீன்

1 mins read
d29a66e9-576d-44a0-80d0-dce5d43e4dcc
இதன் முழுப் பெயர் அரியோசோமா தமிழிகம் ஆகும். - படம்: ஊடகம்

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு, ‘தமிழிகம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இதன் முழுப் பெயர் அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) ஆகும்.

இந்த விலாங்கு மீன், இதுவரை அறியப்படாத ‘காங்கிரிடே’ (Congridae) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழுக்கும் அதன் தொன்மைக்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் செயல் இயக்குநர் முனைவர் அஜித் குமார் தெரிவித்ததாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த மீனை முதலில் கண்டுபிடித்த மீனவர்கள், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டனர் என்றும் இந்தப் புதிய கடல்வாழ் உயிரினத்தைக் கண்டுபிடித்ததில் ஆய்வாளர்களைப் போலவே, தூத்துக்குடி மீனவர்களுக்கும் முக்கியப் பங்குள்ளது என்றும் தமிழிகம் விலாங்கு மீன் குறித்த ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரான முனைவர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டு தூத்துக்குடியில் இருந்து, இதே காங்கிரிடே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு தங்கள் ஊரின் பெயரை வைக்குமாறு மீனவர்கள் கேட்டனர்.

“ஆகையால், அந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் (Ariosoma Thoothukudiense) எனப் பெயர் வைக்கப்பட்டது என்று கோடீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்