சென்னை: பயங்கரவாத இயக்கங்களுக்கு தென்னிந்திய மாநிலங்களில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக புகார்கள் கூறப்பட்டதன் எதிரொலியாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. அப்போது, கணக்கில் வராத ரொக்கப் பணம், பல்வேறு மின்னிலக்க ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிஸ்ப் உத் தஹ்ரிர் என்ற இயக்கம் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், யூடியூப் தளத்தில் இந்த இயக்கத்துக்கு ஆதரவாக வெளியான காணொளி குறித்து இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த முன்னாள் கௌரவப் பேராசிரியரான ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்ததும் அதன்மூலம், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசி மூளைச்சலவை செய்து இளைஞர்களைத் திரட்டியதும் தெரியவந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஹமீது உசேன் உள்ளிட்ட ஆறு பேர் கைதாகினர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டதும், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, சென்னை ஏழுகிணறு, வெட்டுவாங்கேணி, ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமானோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், தாம்பரம், நன்மங்கலம், சித்தாலப்பாக்கம், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றதாகவும் அப்போது பல்வேறு முக்கியமான தகவல்கள் திரட்டப்பட்டதாகவும் தெரிகிறது.
நாகர்கோவில், திருநெல்வேலியில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டுத் தொடர்பு குறித்த ஆவணங்கள், தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக இந்து தமிழ் ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“மேலும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் விதமாக, பல்வேறு இடங்களில் ரகசியக் கூட்டங்களை சிலர் நடத்தி இருப்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.
“முழுமையான விசாரணைக்குப் பிறகே அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்,” எனத் தேசிய புலனாய்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

