தூத்துக்குடி: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ள ஆடவர் ஒருவரை தேசிய புலனாய்வுத் துறையினர் (என்ஐஏ) சென்னை அருகே கைது செய்தனர்.
அந்த ஆடவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவரும் இவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
பீகாரைச் சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவர், தூத்துக்குடி, தாளமுத்து நகர் அருகேயுள்ள சிலுவைப்பட்டியில் தங்கி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் கட்டடத்தில் சாயம் பூசும் வேலை செய்து வருகிறார் என்பதை புலனாய்வுத்துறை கண்டறிந்தது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த ஏழு பேரிடம் அதிரடிச் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
முஸ்பிக் ஆலமின் கைப்பேசியைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், அவருடன் மூன்று பீகார் இளைஞர்கள் நெருக்கமாகப் பழகி வந்தது தெரிய வந்தது. அவர்கள் அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவர்களது கைப்பேசிகளை வாங்கி அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்தனர்.
முஸ்பிக் ஆலம் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் அவருடன் நெருங்கிப் பழகிய மூன்று பீகார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், பயங்கரவாதிகளிடம் அவர்கள் தொடர்பு வைத்திருந்ததற்கான எவ்வித ஆதாரமும் சிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உட்பட நான்கு பேரையும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், அந்த நான்கு பேரிடமும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் மாநில உளவுப்பிரிவு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

