பல்கலைக்கழகங்களுக்கு உயிர்கொடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும்: ராமதாஸ்

பல்கலைக்கழகங்களுக்கு உயிர்கொடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும்: ராமதாஸ்

2 mins read
f158b2cd-a6f2-4174-a81b-fd261d3c4282
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் செயல்பட முடியாமல், மூழ்கும் நிலையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு உயிரூட்டிக் காப்பாற்ற சிறப்புத் திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புகழ்பெற்ற, பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 536 ஆசிரியர் பணியிடங்களில் 350 இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாக வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் எவரும் பணியில் அமர்த்தப்படவில்லை. அதேநேரத்தில் ஆண்டுதோறும் 4 முதல் 6 ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருவதால், மொத்தமுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 536 இல் இருந்து கிட்டத்தட்ட 200ஆகக் குறைந்துவிட்டது. இரு துறைகளில் ஒரே ஒரு பேராசிரியர்கூட இல்லை என்பதால், பிற துறைகளின் பேராசிரியர்களைக் கொண்டு பாடங்களை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும் தான் என்றில்லாமல், உயர்கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் பேராசிரியர்களின் எண்ணிக்கை ஓரளவு மனநிறைவு அளிக்கும் வகையில் உள்ளது. மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், கோவை பாரதியார், சேலம் பெரியார் உள்ளிட்ட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

குறைந்த வருமானத்தையும் குறைவான பேராசிரியர்களையும் கொண்டு சரிவரச் செயல்பட முடியாமல் தத்தளிக்கும் பல்கலைக் கழகங்கள் நிரந்தரமாக மூடும் நிலை ஏற்படுவதற்குள் அரசு, ஒரு சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து அந்தப் பல்கலைக் கழகங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் வருவாயை அதிகரிப்பது ஆகியவை குறித்தும், பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து வழங்குவதற்காக கல்வியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். குறித்த காலத்தில் வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று, அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்