வேடசந்தூர்: நிலாப் பெண்ணாக ஒரு சிறுமியைத் தேர்வு செய்து இரவு முழுதும் பெண்கள் மட்டும் பங்கேற்று வழிபடும் திருவிழா கோட்டூர் சிற்றூரில் சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டம் ஊராட்சியைச் சேர்ந்த கோட்டூர் சிற்றூரில் ஒவ்வோர் ஆண்டும் தை மாதப் பௌர்ணமியில் இந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வழிபாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அந்த ஊரில் வசிக்கும், அனைத்துக் குடும்பத்தில் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில், ஒரு சிறுமி நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் சிறுமிக்கு ஊர் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பால், பழம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை கோயிலில் வைத்து சிறுமிக்கு வழங்குவர்.
இந்த ஆண்டு நிலாப்பெண்ணாக கோட்டூர் அருகே தலையூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் - தமிழ்செல்வி தம்பதியின் மகள் தீக்ஷா (13) தேர்வு செய்யப்பட்டார். இவர், எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
தை மாதம் பௌர்ணமி முழுநிலவு நாளான செவ்வாய்கிழமை இரவு (பிப்.,11) சிறுமிக்குப் புத்தாடை அணிவித்து ஆவாரம்பூ மாலையிட்டு அலங்கரித்து, தலையில் ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடையைச் சுமக்க செய்து சிறுமியை ஊருக்கு வெளியே உள்ள மாசடைச்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுமியை நிலாப்பெண்ணாகப் பாவித்து வழிபடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும், ஊர் மக்கள் நோய்நொடியின்றி வளமான வாழ்க்கையைப் பெறுவர் என்ற நம்பிக்கை அந்த ஊர் மக்களிடம் உள்ளது.