ராமேஸ்வரம்: இலங்கையின் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் ‘சமுதுரா’ கப்பல் மூலம் சனிக்கிழமை (அக்டோபர் 3) சுற்றுக்காவல் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அனைத்துலகக் கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. பாக் நீரிணை என்பது தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய கடல் பகுதி. இது, இரு நாட்டு மீனவர்களுக்கும் வளமான மீன்பிடிப் பகுதியாகத் திகழ்கிறது.
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இருநாட்டு மீனவர்களும் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.
இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்பது பேர் சிறைப்பிடிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு அருகே விசைப்படகைப் பறிமுதல் செய்து மீனவர்களைச் சிறைப்பிடித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பைப் பற்றிப் பேசாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,” என அவர் சாடினார்.
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் உடனடியாக மீட்க மத்திய அரசு தூதரக ரீதியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
