கோவை: கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, அதன் அண்டைப் பகுதியான கோயம்புத்தூரிலும் அந்நோய் பரவ வாய்ப்புள்ளது என்றும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நோய்வாய்ப்பட்ட பழந்தின்னி வவ்வால், பன்றி மற்றும் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நிபா வைரஸ் பரவும் தன்மை கொண்டது. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு சுகாதார நிலையம், அல்லது அரசு மருத்துவமனையின் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் மட்டும் 425 பேர் நிபா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாலக்காட்டில், கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள 110 பேரில் 61 பேர் சுகாதாரத் துறை ஊழியர்கள். கோழிக்கோட்டில் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.