தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக பாஜகவினருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

2 mins read
c0c1d447-d0b2-47d4-9ccb-656ca3882254
பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமன். - படம்: ஊடகம்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக பிரமுகர்களுடன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தீவிர ஆலோசனை மேற்கொண்டார். தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிப்பது, தேர்தல் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தேர்தல் கூட்டணி, கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் விவாதித்ததாகவும், கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும் என்றும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை வர உள்ளதாகவும் அப்போது அதிமுகவுடனான கூட்டணி குறித்து அவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழக பாஜகவுக்கான புதிய தலைவர் குறித்தும் அவர் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட வாய்ப்பில்லை என்றும் அதற்குப் பதிலாக தேர்தல் குழு ஒன்றை அமைக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு குழு அமைக்கப்பட்டால் பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன்கீழ் அக்குழு செயல்படும் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அக்கட்சித் தலைமை இதை இன்னும் உறுதி செய்யவில்லை.

வரும் 11ஆம் தேதி பங்குனி உத்திரம் என்பதால் அன்றைய தினம் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என பாஜகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்