விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை: சீமான்

1 mins read
6df5304e-0385-4748-8e1d-bd528ff29029
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வழக்கம்போல, அத்தேர்தலிலும் தமது கட்சி தனித்தே போட்டியிடும் என்று சீமான் கூறினார்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2026ஆம் ஆண்டில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். தற்போது 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டேன். அதுகுறித்து விரைவில் அறிவிப்போம்,” என்று சொன்னார்.

கடந்த வார இறுதியில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது பற்றிக் கேட்டதற்கு, “அது மேல்தட்டு மக்களின் விளையாட்டு. யார் என்னைக் கேட்பது, யார் என்னைத் தடுப்பது என்ற பதவி, பணத் திமிரில் அவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. அதற்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு சாலைகளைச் சீரமைக்கலாம், கல்விக்கூடங்களைச் சீரமைக்கலாம்,” என்று சீமான் கூறினார்.

மேலும், ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று கூறும் அரசிற்கு, பந்தயம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

குறிப்புச் சொற்கள்