புதுடெல்லி: ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது.
அதனைத் தொடர்ந்து, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறும் வகையில் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. அதில் 200க்கும் மேற்பட்டோர் படித்து அர்ச்சகராகத் தீட்சை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகமத்திற்கு எதிராக அனைத்துச் சாதி அர்ச்சகர்களையும் பிற பணியாளர்களையும் நியமிப்பதற்கோ தேர்வு செய்வதற்கோ தடை விதிக்கவேண்டும் என்று ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவ்வழக்கோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் அனைத்துச் சாதி அர்ச்சகர்களை நியமனம் செய்யவேண்டும் என்ற வழக்கையும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 14) விசாரித்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், “தமிழகக் கோவில்களில் 2,500க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டும்,” எனக் கோரினார்.
பின்னர் மனுதாரர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், “ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் மிகக் குறைவாகவே உள்ளன. அவற்றில் அனைத்துச் சாதி அர்ச்சகர்களை நியமிக்கக்கூடாது. மற்றக் கோவில்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்களை நியமிக்க எங்களுக்கு ஆட்சேபம் இல்லை,” என்று சொன்னார்.
அதனையடுத்து, ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களையும் பின்பற்றாத கோவில்களையும் மூன்று மாதங்களில் அடையாளம் காணவும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.