சென்னை: தமிழகத்தில் சேவல் சண்டைக்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை எனத் தமிழகக் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
போட்டிகளை முறைப்படுத்தவே அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது அவரது தரப்பு தெளிவுபடுத்தியது.
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது பாரம்பரியச் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி, ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
காவல்துறையின் நிபந்தனைகளைப் பின்பற்றி, உரிய பாதுகாப்புடன் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் சூதாட்டமோ, விலங்குகள் துன்புறுத்தலோ நடைபெறவில்லை என்றும் அம்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அம்மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின் அடிப்படையில் சேவல் சண்டையை முறைப்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதே தவிர, போட்டிக்குத் தடை விதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிஜிபியின் சுற்றறிக்கை குறித்த விவரங்களைக் காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாகக் கொண்டுசேர்க்க உத்தரவிட்டார்.
மேலும், சேவல் சண்டைக்குத் தடை இல்லாததால், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
