சென்னை: தமிழகத்தில் காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தக்காளி, வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதையடுத்து உணவகங்களில் தக்காளிச் சட்னி பறிமாறுவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தக்காளி, வெங்காயத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது என ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.15 க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை கிட்டத்தட்ட ஐந்து மடங்காக அதிகரித்துவிட்டது. இதே போல் ரூ.30 க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது ரூ.70 ஆகிவிட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து தக்காளி, வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
“சென்னையில் பசுமைப் பண்ணை மூலம் விலையேற்றத்தை அரசு தடுத்துள்ளது. ஒருவருக்கு இரண்டு கிலோ தக்காளி, வெங்காயம் மட்டுமே விற்கப்படுகிறது. கொள்முதல் விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதால் பொது மக்களுக்குச் சிரமம் குறைந்துள்ளது. எனவே சென்னையைப் போல் மற்ற மாவட்டங்களிலும் பசுமைப் பண்ணையை விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறோம்,” என்று அமைச்சர் பெரிய கருப்பன் மேலும் தெரிவித்துள்ளார்.